இந்தியர்களின் அன்றாட சமையலில் முக்கியப் பங்கு வகிக்கும் சமையல் எண்ணெய்களின் பயன்பாடு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்   மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்  இணைந்து புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. இதில், சமையலுக்கு ஒரே வகையான எண்ணெய்யை மட்டுமே, குறிப்பாக கடுகு எண்ணெய்யை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

பொதுவாக வட இந்தியாவில் கடுகு எண்ணெய் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், கடுகு எண்ணெய்யில் ‘யுருசிக் அமிலம்’  அதிக அளவில் இருப்பதால், அதை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்தும் போது இதய ஆரோக்கியத்திற்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதேபோல, பலராலும் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படும் பாம் ஆயிலில்  நிறைவுற்ற கொழுப்பு  இருந்தாலும், அதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ போன்ற முக்கியமான ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன என்பதை ICMR சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உடலுக்கு ‘நிறைவுறா கொழுப்பு அமிலங்கள்’  சரியான விகிதத்தில் தேவைப்படுகின்றன. ஆனால், சந்தையில் கிடைக்கும் எந்த ஒரு தனிப்பட்ட சமையல் எண்ணெய்யிலும் இந்த அனைத்து ஊட்டச்சத்துகளும் சரியான சமநிலையான விகிதத்தில் இருப்பதில்லை. எனவே, ஒரே வகையான எண்ணெய்யை மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்தாமல், அவ்வப்போது வெவ்வேறு வகையான எண்ணெய்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதே உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் வழங்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கடுகு எண்ணெய், எள் எண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் தவிட்டு எண்ணெய்  போன்ற பல்வேறு வகையான எண்ணெய்களைச் சுழற்சி முறையில் பயன்படுத்துவது அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட எண்ணெய்களைக் கலந்து பயன்படுத்துவது நல்லது. இதன் மூலம் இதய நோய், அதிக ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகளில் இருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.