உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் காதல் ஜோடி ஒன்று எடுத்த முடிவு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த நான்சி மற்றும் இங்கிலீஷ் என்ற இருவரும், குடும்பத்தினரின் எதிர்ப்புகளை கடந்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதையடுத்து கோடாரே பகுதியில் உள்ள ஜிகரியா கோயிலில் இருவரும் திருமண சடங்குகளை நிறைவேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோயிலில் நடந்த இந்த திருமணத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. காதலர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மாலை அணிவித்து, வாழ்க்கை முழுவதும் ஒன்றாக இருப்பதாக உறுதி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த காதல் திருமணத்திற்கு மேலும் பரபரப்பை சேர்த்தது, இருவரும் ரூ.100 மதிப்புள்ள ஸ்டாம்ப் பேப்பரில் ஒரு ஒப்பந்தம் செய்ததாக வெளியான தகவல்தான். அதில், இருவரும் தங்களது விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டதாகவும், ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காதல் திருமணம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். காதலுக்காக எடுத்த இந்த முடிவு தற்போது கோண்டா பகுதியில் பேசப்படும் முக்கிய விஷயமாக மாறியுள்ளது.
