உத்தரப்பிரதேச மாநிலம் ராய்பரேலி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் கொலைச் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. திருமணமான பெண் ஒருவர் தனது கணவருடன் சேர்ந்து, கள்ளக்காதலனை கொலை செய்ததாகவும், பின்னர் அவரது உடலை வீட்டுக்குள்ளேயே குழி தோண்டி புதைத்ததாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். பல நாட்களுக்குப் பிறகு வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டுக்குள் தோண்டி சடலத்தை மீட்டனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,  ரீதா என்ற பெண் தனது தாய் வீட்டில் அமித் என்ற நபருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த வீட்டிற்கு அவரது கணவர் ராம் பிரகாஷ் அடிக்கடி வந்து சென்றதாகவும், இந்த நிலையில் அமித் மற்றும் ராம் பிரகாஷ் இடையே ஏற்பட்ட தகராறே சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த தகராறைத் தொடர்ந்து ரீதாவும், அவரது கணவரும் இணைந்து அமித்தை கொலை செய்து, உடலை வீட்டுக்குள்ளேயே புதைத்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த வழக்கில் ரீதாவை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவரது கணவர் ராம் பிரகாஷை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி அகிலேஷ் யாதவ் அளித்த தகவலின்படி, ஜூலை 29-ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், ஜூலை 31-ஆம் தேதி ரீதா நேரில் வந்து நடந்ததை கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பிறகு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிராமம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.