உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளைஞருடன் ஏற்பட்ட காதல் காரணமாக, திருமணமான பெண் ஒருவர் தனது 6 மாத ஆண் குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. குடும்பத்தினர் பல நாட்கள் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார், அந்தப் பெண்ணை ஹாபூர் மாவட்டத்தில் பாதுகாப்பாக மீட்டனர். விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் விஷால் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியதாக அவர் தெரிவித்ததாக போலீசார் கூறினர். ஆனால் அவருடன் சென்றிருந்த 6 மாத குழந்தை எங்கு உள்ளது என்ற கேள்வி அப்போது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பெண் தனது குழந்தையுடன் மீரட் பேருந்து நிலையத்தில் காதலனை சந்தித்ததாக தெரியவந்தது. குழந்தையை தன்னுடன் வைத்துக்கொள்ள முடியாது என்று கூறிய காதலன், அதை பாதுகாப்பான இடத்தில் விட்டுவிடுவதாக சொல்லி குழந்தையை அழைத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் மறுநாளே, மீரட்டில் உள்ள ஒரு கால்வாயில் அந்த 6 மாத குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தனது மனைவியும் அவரது காதலனும்தான் குழந்தையின் மரணத்திற்கு காரணம் என்று குழந்தையின் தந்தை இம்ரான் போலீசில் புகார் அளித்துள்ளார். சம்பவம் நடந்த பகுதி மீரட் காவல் நிலைய எல்லைக்குள் வருவதால், வழக்கு அங்குள்ள போலீசாரிடம் மாற்றப்பட்டுள்ளது. குழந்தையின் உயிரிழப்புக்கான உண்மை என்ன, இதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.