வயது அதிகரிக்கும் போது ஏற்படும் மூட்டு வலி, டைப்-2 நீரிழிவு நோய், ஞாபகமறதி மற்றும் இளவயது மரண அபாயம் போன்றவற்றைத் தவிர்க்க உடற்பயிற்சி மிகவும் அவசியமாகும். வயதானாலும் தொடர்ந்து முறையான பயிற்சிகளைச் செய்து வரும்போது, நமது உடலின் முக்கிய உறுப்புகள் வலுவடைந்து நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

அந்த வகையில் முதல் பயிற்சியான புஷ்-அப், கைகள், தோள்பட்டை மற்றும் முதுகுப் பகுதிக்கு நல்ல வலுவை அளிக்கிறது. சமதரையில் படுத்து, உள்ளங்கைகளையும் கால் விரல்களையும் மட்டும் தரையில் ஊன்றி, நெஞ்சுப் பகுதி தரையைத் தொட்டு எழும்படி இந்த எளிய பயிற்சியைச் செய்ய வேண்டும்.

இரண்டாவது பயிற்சியாக, நாற்காலி இல்லாமல் அமர்ந்து எழுவது போன்ற  உடற்பயிற்சியைச் செய்யும்போது இடுப்புக்குக் கீழ் உள்ள தொடை, கால்கள் மற்றும் முழங்கால்கள் பலவடைகின்றன. இரு பாதங்களையும் தோள்பட்டை அகலத்திற்கு விரித்து வைத்து, கைகளைக் கோர்த்தபடி தொடை தரைக்கு இணையாக வரும் வரை அமர்ந்து எழ வேண்டும்.

மூன்றாவதாக, நின்றவாறு குதிகாலை உயர்த்தும்  பயிற்சியானது ஒட்டுமொத்த உடலுக்கும், குறிப்பாக கணுக்கால் மற்றும் மூட்டுகளுக்கு நல்ல நெகிழ்வுத்தன்மையையும் பலத்தையும் தருகிறது. கால் விரல் நுனிகளைத் தரையில் ஊன்றி, தேவைப்பட்டால் முழங்காலைச் சற்று வளைத்தபடி குதிகால்களை மேலே உயர்த்தி இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.