உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் எல்.டி.எல் அளவு அதிகரிப்பது, தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற தீவிர ஆபத்துகளுக்கு வழிவகுக்கிறது.

மருத்துவ ரீதியாக ‘அதிரோஸ்கிளிரோசிஸ்’ என அழைக்கப்படும் இந்த நிலைமைக்கு, நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் தவறான காலை உணவுகளே முக்கியக் காரணமாக அமைகின்றன என டெல்லி ஸ்ரீ பாலாஜி ஆக்சன் மருத்துவமனையின் இதயவியல் இயக்குநர் டாக்டர் அமர் சிங்ஹால் எச்சரிக்கிறார்.

காலையில் அவசர அவசரமாக வெறும் தேநீர் மற்றும் பிஸ்கட் மட்டும் சாப்பிடுவது அல்லது உணவைத் தவிர்ப்பது மிகவும் தவறான பழக்கமாகும். இது ரத்த சர்க்கரை அளவில் சீரற்ற தன்மையை ஏற்படுத்தி, பின்னர் அதிகளவில் உணவை உட்கொள்ளத் தூண்டுவதுடன் உடல் எடையையும் கொழுப்பையும் உயர்த்துகிறது.

மேலும், அதிக வெண்ணெய் அல்லது நெய் சேர்த்த உணவுகள், பொரித்த தின்பண்டங்கள், மைதா பேக்கரி பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளைத் தொடர்ந்து சாப்பிடுவது உடலில் கெட்ட கொழுப்பைத் தேவையின்றி அதிகரிக்கச் செய்கிறது.

இதயத்தை ஆரோக்கியமாகப் பாதுகாக்க, காலை உணவில் கரையக்கூடிய நார்ச்சத்து, புரதச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவை நிறைந்து இருக்க வேண்டும். இதற்காக ஓட்ஸ், கஞ்சி, முளைகட்டிய தானியங்கள், முட்டை, தயிர், பருவகாலப் பழங்கள், விதைகள் மற்றும் குறைந்த அளவு உலர் திராட்சை, பாதாம் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வது சிறந்தது.

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் அல்லது குடும்பத்தில் இதய நோய் பின்னணி உள்ளவர்கள், சரியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சியோடு வழக்கமான ‘லிப்பிட் புரொஃபைல்’ ரத்தப் பரிசோதனையை மேற்கொள்வது அவசியம். சரியான காலை உணவுப் பழக்கத்தை இன்றே தொடங்குவது, எதிர்காலத்தில் இதய நோய்கள் வராமல் தடுக்கும் கேடயமாக அமையும்.