அமெரிக்காவின் அதிநவீன ஐந்தாம் தலைமுறை சூப்பர் சோனிக் ஸ்டெல்த் போர் விமானமான எப்-35-ஐ துருக்கிக்கு விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஆனால், துருக்கிக்கு இந்த அதிநவீன போர் விமானங்களை வழங்குவது மத்திய கிழக்கின் அதிகாரச் சமநிலையை முழுமையாகச் சீர்குலைக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்த அவர், துருக்கி ஆக்கிரமிப்பு எண்ணங்களைக் கொண்டுள்ளது என்றும் எச்சரித்துள்ளார்.
ஈரான் விவகாரம் குறித்துப் பேசுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள நேதன்யாகுவின் இந்த எதிர்ப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ‘ஏர் போர்ஸ் ஒன்’ விமானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப்பிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, “நாங்கள் யாருக்கு எதை விற்க வேண்டும் என்று யாரும் எனக்குச் சொல்ல முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும், துருக்கி தமக்கு மிகவும் சிறந்த நட்பு நாடாக விளங்குவதாகவும், சிரியா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிராந்தியப் பிரச்சினைகளில் துருக்கியின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என்றும் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
துருக்கிக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்பதை ஒப்புக்கொண்ட டிரம்ப், இருப்பினும் அமெரிக்கா – துருக்கி இடையேயான இருதரப்பு உறவு மிகவும் வலுவாகவே தொடர்வதாகத் தெரிவித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டில் டிரம்ப்பின் முதல் ஆட்சிக்காலத்தின்போது, ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பைத் துருக்கி வாங்கியதால் எப்-35 திட்டத்திலிருந்து அது அதிரடியாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனினும், சமீபத்தில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின் போது, எஸ்-400 கொள்முதலால் அமெரிக்கா விதித்த தடைகளை விலக்கிக் கொள்ளத் தயாராக இருப்பதாக டிரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் துருக்கிக்கு மீண்டும் எப்-35 போர் விமானங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலின் கடும் எதிர்ப்பை மீறி டிரம்ப் இந்த ஆயுத விற்பனையை முன்னெடுத்து வருவது சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
