மராட்டிய மாநிலம் பிம்ப்ரி சின்வாட் நகரில் நடந்துள்ள ஒரு கோரச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வகாட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், பக்கத்து வீட்டில் வசிக்கும் 65 வயது முதியவர் ஒருவர், இரண்டு பச்சிளம் சிறுமிகளைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ள கொடூரச் செய்தி அப்பகுதி பதைபதைக்க வைத்துள்ளது. பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரத்தைப் பயன்படுத்தி இந்த அயோக்கியத்தனத்தில் ஈடுபட்ட ரம்ஜான் பக்வான் என்ற முதியவரைப் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் கூலி வேலை செய்து வரும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தினசரி அனைவரும் வேலைக்குச் சென்றுவிடும் நிலையில், சம்பவத்தன்று வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை வலுக்கட்டாயமாகத் தன் வீட்டிற்கு இழுத்துச் சென்று அந்த அரக்கன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதுபோன்று மே மாதத்தில் இருந்து கடந்த ஒன்றரை மாத காலத்திற்குள் அந்த மூத்த சிறுமியிடம் 4 முறையும், அவரது 4 வயது தங்கையிடம் ஒரு முறையும் இந்த வெறியன் தனது அத்துமீறலை அரங்கேற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
யாரிடமாவது சொன்னால் கத்தியால் வயித்தைக் கிழித்துக் கொன்றுவிடுவேன் என்று அந்த முதியவர் மிரட்டியதால், பயந்துபோன சிறுமிகள் நீண்ட நாட்களாக யாரிடமும் சொல்லாமல் இருந்தனர். இதற்கிடையில், சிறுமி அந்த முதியவரின் வீட்டிற்குச் செல்வதைக் கண்ட பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர், மாலை பெற்றோரிடம் இதனைத் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் குழந்தையிடம் விசாரித்தபோது, அந்த முதியவர் செய்த கொடூரக் குற்றங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிச்சத்திற்கு வந்தன.
உடனே குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போக்ஸோ சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த முதியவரை உடனடியாகக் கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதுடன், அந்த முதியவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
