தமிழகத்தில் ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுவது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. முதலமைச்சர் பதவி ஏற்பு விழா முதல் அமைச்சர்கள் பதவியேற்பு விழா என தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்துகின்ற நிலையில் தமிழக வெற்றிக்கழக அரசு ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சி என்பதால் இவ்வாறு நடந்துவிட்டது எனவும் தங்களுக்கும் தமிழ் தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுவது விருப்பம் கிடையாது எனவும் விளக்கம் கொடுத்திருந்தது.
இந்த நிலையில் இன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா ஆளுநர் தலைமையில் நடைபெறும் நிலையில் முதல்முறையாக வந்தே மாதரத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தான் முதல்முறையாக தமிழ் தாய் வாழ்த்து பாடல் எழுதப்பட்டது. அப்படி இருக்கும்போது தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஒரு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வந்தேமாதரத்துடன் தொடங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னால் எம்எல்ஏ ஆளூர் ஷானவாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறும் போது தமிழ்நாடு இன்னும் என்னென்ன கொடுமைகளை பார்க்கப் போகிறதோ தெரியவில்லை. கடந்த அரசை போலவே இந்த விஷயத்தில் மட்டும் உங்களோடு சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என இந்த அரசு சொல்லி இருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது என்று கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக மூத்த எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா கூறும்போது, தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் ஆளுநரை கண்டித்து ஒரு ஐந்து நொடியோ இல்ல ஐந்து நிமிடமோ விஜய் கண்டித்து பேசுவாரா.? மேலும் கொத்து பரோட்டா போடாவிட்டிலும் வெத்து புரோட்டாவாது முதலமைச்சர் விஜய் போடுவாரா என காட்டமாக விமர்சித்துள்ளார்.
