சமூக வலைதளங்களின் வளர்ச்சி உலகளவில் மனிதர்களை ஒன்று சேர்த்தாலும், சில நேரங்களில் அதுவே இனவெறியையும் வெறுப்பையும் பரப்புவதற்கான களமாகவும் மாறி வருகிறது. அமெரிக்காவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் கரிஷ்மா ரெட்டி என்பவருக்கு சமூக வலைதளங்களில் ஏற்பட்டுள்ள கசப்பான அனுபவம் தற்பொழுது உலகளவில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது. மருத்துவர் கரிஷ்மா ரெட்டி, தாம் மருத்துவப் படிப்பின் போது ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் பணியாற்றிய அனுபவத்தையும், அப்போது நோயாளி ஒருவர் தன்னிடம் நடந்து கொண்ட இனவெறி சார்ந்த அணுகுமுறையையும் குறித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காணொளியைப் பகிர்ந்திருந்தார்.

நெற்றியில் பொட்டுடன் தோன்றி அவர் வெளியிட்ட அந்த சாதாரண வீடியோ, அவருக்கு நேர்மறையான ஆதரவைப் பெற்றுத் தருவதற்குப் பதிலாக, இணையதளத்தில் பெரும் வெறுப்பு அலைகளைத் தோற்றுவித்துள்ளது. பல அமெரிக்க நெட்டிசன்கள் அவருடைய காணொளியின் பின்னூட்டத்தில்  இந்தியப் பண்பாட்டையும், இந்து பாரம்பரியத்தையும், அவர் நெற்றியில் வைத்திருந்த பொட்டையும் கேலி செய்து கடுமையான இனவெறிக் கருத்துகளைப் பதிவிட்டனர். மேலும், “உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேறி இந்தியாவுக்கே திரும்பிப் போங்கள்” என்பது போன்ற வன்மமான கருத்துகளையும் தாராளமாகத் தூவினர்.

இந்தத் தொடர் இனவெறித் தாக்குதலால் மனவேதனையடைந்த மருத்துவர் கரிஷ்மா ரெட்டி, அதற்குப் பதிலளிக்கும் விதமாக மற்றொரு காணொளியைப் பதிவேற்றினார். அதில் பேசிய அவர், “நான் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவள். இருப்பினும், என் வாழ்நாளில் இதுவரை இந்த அளவிற்கு இந்தியர்களுக்கு எதிரான இனவெறியையும் வெறுப்பு உணர்வையும் பார்த்ததே இல்லை” என்று மிக உருக்கமாகக் குறிப்பிட்டார். அத்துடன், இந்து மதப் பாரம்பரியம் மற்றும் பசு மாடுகள் குறித்த சில தவறான புரிதல்களுக்குப் விளக்கமளித்த அவர், மனிதர்களிடையே வெறுப்பை விதைப்பதற்குப் பதிலாக அன்பையும் பரிவையும் வளர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மருத்துவர் கரிஷ்மாவுக்கு எதிராகச் சிலர் இணையத்தில் நஞ்சைக் கக்கினாலும், உலகெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். மருத்துவத் துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஒரு மருத்துவருக்கு அவரது பண்பாட்டின் காரணமாக இப்படி ஒரு அவமானம் நேர்ந்தது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், இந்தச் சூழலிலும் அவர் மிகவும் கண்ணியத்துடனும் அமைதியுடனும் பதிலளித்த விதம் பாராட்டத்தக்கது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் அதிகரித்து வரும் இனவெறிப் போக்கை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குச் கொண்டுவந்துள்ளது.