கார்ப்பரேட் அலுவலகங்களில் நிலவும் கடுமையான கண்காணிப்பு மற்றும் மைக்ரோ மேனேஜ்மென்ட்  நடைமுறைகள் குறித்த விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் சூடுபிடித்துள்ளன. தன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வேலை நேரம் முடிவதற்குச் சரியாக 10 நிமிடங்களுக்கு முன்பு அலுவலகத்தை விட்டு வெளியேறிய இளம் எச்.ஆர். ஊழியர் ஒருவருக்கு, நேரடியாக சிஇஓ-விடமிருந்து வாட்ஸ்அப் மூலம் வந்த கேள்வி எழுப்பும் குறுஞ்செய்தி ஒன்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெட்டிட் தளத்தில் பகிரப்பட்ட இந்தச் சம்பவம், கார்ப்பரேட் உலகில் ஊழியர்களின் சுதந்திரம் மற்றும் மன அழுத்தங்கள் குறித்துப் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

புதிதாக முழுநேரக் கார்ப்பரேட் பணிக்கு வந்த அந்தப் பெண், வழக்கமான நேரத்திற்குச் சற்று முன்பு மாலை 5:43 மணியளவில் அலுவலகத்திலிருந்து கிளம்பியுள்ளார். கிளம்பிய சில நிமிடங்களிலேயே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியிடமிருந்து (CEO), “இன்று நீங்கள் எப்போது அலுவலகத்தை விட்டு வெளியேறினீர்கள்?” என்ற நேரடியான குறுஞ்செய்தி அவரது தொலைபேசிக்கு வந்துள்ளது.

தான் அலுவலகச் செலவுக்காகச் சொந்தப் பணத்திலிருந்து வழங்கிய தொகையைத் திரும்பப் பெற  17 நாட்களுக்கு மேல் அலைக்கழிக்கப்பட்டதாகவும், ஆனால் தனது சிறிய தாமதத்தைக் கூட நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் துல்லியமாகக் கண்காணித்துத் கேள்வி கேட்பது இரட்டை நிலைப்பாடுடையது என்றும் அவர் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார்.

தனது முதல் கரியர் அனுபவமே இப்படி இருக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும், கார்ப்பரேட் வாழ்க்கை தான் நினைத்ததை விட மிகவும் கடினமானது என்றும் அந்த Gen Z ஊழியர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் இணையத்தில் வைரலானதை அடுத்து, பல நெட்டிசன்கள் அந்த சிஇஓ-வின் செயலைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பணியாளர்களின் உற்பத்தித் திறனைக் கணக்கில் கொள்ளாமல், கடிகார நேரத்தை மட்டும் வைத்து கண்காணிப்பது ஆரோக்கியமான பணிச் சூழலுக்கு வழிவகுக்காது என்று கருத்து தெரிவித்துள்ள பலரும், அந்தப் பெண் அங்குத் தேவையான அனுபவத்தைப் பெற்றுவிட்டுச் சிறந்த நிறுவனங்களுக்கு மாறுவதே நலம் என்று அறிவுரை வழங்கி வருகின்றனர்.