அமைச்சர் நிர்மல் குமார், திமுகவின் நீட் அரசியல் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து காரசாரமாகப் பேசியுள்ளார். இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “திமுக இது போன்ற கேவலமான செயல்களைச் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். கடந்த ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் ‘நீட் தேர்வை நிறுத்துவதற்கு எங்களிடம் ஒரு ரகசியம் இருக்கிறது’ என்று பிரச்சாரம் செய்தார். ‘ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட்டை ரத்து செய்வோம்’ என்று அவர் சொன்ன வார்த்தைக்கு இதுவரை என்ன பதில் வைத்திருக்கிறார்? அவர் தெரிந்துதான் பேசினாரா அல்லது தெரியாமல் பேசினாரா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து திமுகவின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய அவர், “உண்மையில் உதயநிதிக்கு பார்லிமென்ட் என்றால் என்னவென்றே தெரியாது; சட்டம் என்றால் என்னவென்று தெரியாது; ஒரு போட்டித் தேர்வு எவ்வாறு நடத்தப்படுகிறது, அதை சட்டப்பூர்வமாக எப்படி நிறுத்த வேண்டும் என்ற அடிப்படை விவரம் கூட தெரியாது. அப்படிப்பட்ட திமுகவுக்கு நீட் தேர்வைப் பற்றி பேசுவதற்கு எந்தவித யோக்கியதையும் அருகதையும் இல்லை. ஆட்சிக்கு வந்த பிறகாவது நீட் ரத்துக்காக உருப்படியாக ஏதாவது ஒரு காரியத்தைச் செய்தார்களா?” என்று காட்டமாக வினவினார்.
மேலும், “நீட் தேர்வு என்பது ஒன்றிய அரசால் பார்லிமென்ட்டில் சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட்ட ஒன்று. மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கும் புரிதல்களுக்கும் ஏற்ப டெல்லியிலும் பல்வேறு இடங்களிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், மாணவர்களின் இந்த நியாயமான போராட்டத்தில் போய் தேவையில்லாமல் திமுகவினர் நுழைந்து ‘ஸ்டிக்கர்’ ஒட்டப் பார்த்து, இறுதியில் அசிங்கப்பட்டுப் போய் நிற்கிறார்கள். மாணவர்களின் உணர்வுகளைப் பயன்படுத்தி திமுக செய்யும் இந்த போலி அரசியல் மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று அமைச்சர் நிர்மல் குமார் சாடியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல் குமார் ஆவேசமாகப் பேசிய இந்த அதிரடி பேட்டி அடங்கிய காணொளி தற்போது எக்ஸ் (X) உள்ளிட்ட சோசியல் மீடியா தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
