தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், அரசுக்கு எதிரான விமர்சனங்களும், அதைத் தொடர்ந்த கைது நடவடிக்கைகளும் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அளித்த பேட்டி ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் அதிர வைத்துள்ளது.

​முதலமைச்சர் விஜய் அவர்களின் அரசு நிர்வாகம் குறித்து கடுமையான கருத்துக்களைக் கூறி கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், வழக்கு விசாரணைக்காக நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை முடிந்த பின்னர், காவல்துறையினர் அவரை மீண்டும் பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்ல போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

​அப்போது செய்தியாளர்களைப் பார்த்ததும் ஆவேசமாகவும் அதே நேரத்தில் உற்சாகமாகவும் பேசிய மார்க்கண்டேயன், “சிறையில் நான் மிகவும் ஹாப்பியாக இருக்கிறேன்! என்னிடம் படிப்பதற்காக 25 புத்தகங்கள் இருக்கின்றன. திமுக தொண்டர்களும், மக்களும் யாரும் கவலைப்பட வேண்டாம்; எல்லோரும் ஹாப்பியாக இருங்கள். நாம் இப்போது எவ்வளவு தூரம் துன்பப்படுகிறோமோ, அவ்வளவு சீக்கிரத்தில் நம்ம ஆட்சிக்கு வரப்போகிறோம்!” என்று மிக ஆக்ரோஷமாக முழக்கமிட்டார்.

​சிறைக்குச் செல்லும் வழியிலும் தளராமல், “எவ்வளவு துன்பம் வருகிறதோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும்” என்று சவால் விடும் தொனியில் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசிய இந்த அதிரடிப் பேட்டி, சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கைதான பிறகும் சிறைக்குள் 25 புத்தகங்களுடன் இருப்பதாகக் கூறி கெத்து காட்டியுள்ள மார்க்கண்டேயனின் இந்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.