பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், பாம்பு என்ற பெயரைக்கேட்டாலே பெரியவர்கள் பயந்து ஓடும் நிலையில், 5 வயது சிறுவன் ஒருவன் இரண்டு பெரிய சாரைப்பாம்புகளைப் பிடித்து விளையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த பகுதியில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை அருகில் இச்சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சம்ஷேர் அலியின் 5 வயது மகன் ரிஸ்வான், அங்கு சுற்றிக்கொண்டிருந்த இரண்டு பெரிய சாரைப்பாம்புகளை கையில் பிடித்துக்கொண்டு சர்வசாதாரணமாக விளையாடியுள்ளான். நீண்ட பாம்புகள் கையில் சீறிக்கொண்டு இருப்பதைப் பார்த்த வழிப்போக்கர்களும் அக்கம் பக்கத்தினரும் ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்தனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Kadak (@its.kadak)

ஆனால், அந்தச் சிறுவன் எவ்வித பயமும் இன்றி பாம்புகளைக் கையாண்டதைக் கண்டு, குறுகிய நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். பலரும் இந்த விசித்திரமான காட்சியைத் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர். இதுகுறித்து சிறுவன் ரிஸ்வான் கூறுகையில், “எனக்கு சிறுவயதில் இருந்தே பாம்புகளைப் பிடிப்பதில் ஆர்வம் அதிகம். பெரிய பாம்புகளையும் பயமின்றி மீட்பேன். இந்த இரு பாம்புகளையும் பாதுகாப்பாகப் பிடித்து, அவற்றிற்கு எவ்வித தீங்கும் விளைவிக்காமல் மீண்டும் பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட்டேன் எனத் தெரிவித்தான்.

சிறுவனின் இந்தத் தைரியத்தைப் பார்த்து அப்பகுதி மக்கள் வியப்படைந்தாலும், இதுபோன்ற ஆபத்தான செயல்களில் மீண்டும் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தினர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேவேளையில், “பாம்பு விஷமுள்ளதோ அல்லது விஷமற்றதோ, சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் அதனைத் தொடுவதோ அல்லது விளையாடுவதோ மிகவும் ஆபத்தானது; இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என வனவிலங்கு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.