மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களாகக் பெய்து வரும் கனமழையால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சார்கோப் பகுதியில் உள்ள கடைகளில் ‘சீரியல் குடை திருடர்கள்’ கைவரிசை காட்டி வரும் விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் அடுத்தடுத்து குடைகள் திருடு போவதாகக் கடை உரிமையாளர்கள் புகார் தெரிவித்தனர். ஆரம்பத்தில் இப்புகாரைக் கேட்ட காவல்துறையினர், இதனை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். ஆனால், கடந்த 16-ஆம் தேதி மீண்டும் அதே பாணியில் திருட்டுச் சம்பவம் அரங்கேறியதை அடுத்து ஒரு கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அக்கடையில் இருந்து சுமார் ரூ.15,000 மதிப்பிலான ‘சன்’ நிறுவனத்தின் 50 குடைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதேபோல், ‘சன்னி கிஃப்ட் சென்டர்’ என்ற மற்றொரு கடையின் உரிமையாளரும் தனது கடையில் குடைகள் திருடு போயுள்ளதாகக் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இத்திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாகக் கிடைத்த 3 வெவ்வேறான சிசிடிவி பதிவுகளில், மர்ம நபர்கள் கடைகளில் இருந்து குடைகளை நைஸாகத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
இதற்கிடையே, மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் உள்ள சாய் பாபா கோயிலிலும் ஒரு விசித்திரமான திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. கோயிலுக்குள் புகுந்த திருடன் ஒருவன், உண்டியலை உடைப்பதற்கு முன்பாக சாய் பாபாவை பயபக்தியுடன் கும்பிட்டுவிட்டு, பின்னர் உண்டியலில் இருந்த ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளான். இந்த நெகிழ்ச்சியும் அதிர்ச்சியும் கலந்த காட்சியும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவங்கள் குறித்து வழக்குகளைப் பதிவு செய்துள்ள மகாராஷ்டிர காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
