உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலோன் மாவட்டத்தின் கல்பி பகுதியில் திடீரென காணாமல் போன இளம்பெண் ஒருவர், தற்போது தனது காதலனைத் திருமணம் செய்து கொண்டு, அதுகுறித்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே இந்தத் திருமணத்தை செய்துகொண்டதாகவும் அந்தப் பெண் அந்த வீடியோவில் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
ஜாலோன் பகுதியைச் சேர்ந்த காஜல் மன்சூரி என்ற இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், காஜலை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இந்த விவகாரத்தில் ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது.
காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காஜல் மன்சூரி, ஓம் சிங் என்ற இளைஞருடன் மணக்கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதில், தாங்கள் இருவரும் இந்து முறைப்படி முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், “என்னை யாரும் கடத்தவில்லை, நான் என் சொந்த விருப்பத்தின் பேரில்தான் ஓம் சிங்குடன் வந்தேன்” என்று கூறி, கடத்தல் புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தற்போது தங்களுக்குப் பெற்றோராலும், உறவினர்களாலும் அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்துள்ள இந்த காதல் ஜோடி,தங்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த வீடியோவில் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஜாலோன் மாவட்ட போலீசார் இந்த வழக்கின் உண்மைத் தன்மையை அறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
