புதுச்சேரி திருக்கனூர் அருகே மண்ணாடிபட்டு பகுதியில், காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் நடத்திய திடீர் சாலை மறியல் போராட்டத்தால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
மண்ணாடிபட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயி பால்ராஜ். இவருக்கு ஸ்ரீலேகா (23) என்ற மகள் இருந்தார். பி.காம் பட்டதாரியான இவர், கடந்த நேற்று முன்தினம் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்துத் தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஸ்ரீலேகாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தத் தற்கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஸ்ரீலேகாவை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த பல வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால், சமீபத்தில் ஸ்ரீலேகா தனது காதலனிடம் திருமணம் குறித்துப் பேசியபோது, அந்த வாலிபர் அவரைத் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் கடுமையான வேதனைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளான ஸ்ரீலேகா தற்கொலை என்ற விபரீத முடிவை எடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதற்கிடையில், ஸ்ரீலேகாவின் தற்கொலைக்குக் காரணமான அந்த வாலிபரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நேற்று அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் காரணமாக அந்தப் பகுதியில் சுமார் மூன்று மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பின்னரே உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
