“கடின உழைப்பு, குடும்பத்தின் ஆதரவு மற்றும் தன்நம்பிக்கை – இந்த மூன்றும் இருந்தால் எந்தவொரு பெரிய கனவையும் நனவாக்க முடியும்” என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த மாணவர் கிருத்திக் ஜெயின். சமீபத்தில் வெளியான Re-NEET UG மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகளில், அகில இந்திய அளவில் 18-வது இடத்தை  பிடித்து நாட்டின் முன்னணி சாதனையாளர்கள் பட்டியலில் இவர் இடம்பிடித்துள்ளார். இவருடைய இந்த அசாத்திய வெற்றி, இவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மருத்துவப் படிப்பு விண்ணப்பதாரர்களுக்கும் மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது.

நாட்டின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றான நீட் தேர்வில், டாப் 20 இடங்களுக்குள் கிருத்திக் ஜெயின் நுழைந்ததற்குப் பின்னால் எந்தவொரு குறுக்குவழியும் இல்லை; மாறாக, அவரது அயராத உழைப்பு மட்டுமே பிரதானமாக இருந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் படிக்கும் போது எந்தவொரு தரவரிசையையும் மனதில் வைத்துப் படிக்கவில்லை. தேர்வு நாளில் நாம் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமே என்ற வருத்தம் நமக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, என்னால் முடிந்த சிறந்த பங்களிப்பை மட்டுமே தினமும் வழங்க நினைத்தேன்” என்று தனது தேர்வுக்கால அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த பயணத்தில் கிருத்திக் ஜெயினின் பெற்றோர் அவருக்கு மிகப்பெரிய தூணாக விளங்கியுள்ளனர். தேர்வுகளில் மதிப்பெண்கள் குறையும் போது அவரைத் திட்டிக் காயப்படுத்தாமல், “பரவாயில்லை மகனே, இன்னும் முன்னேற நிறைய வாய்ப்புகள் உள்ளன, தொடர்ந்து முயற்சி செய்” என்று கூறி அவரது மனவலிமையை அதிகரித்துள்ளனர். மாதிரித் தேர்வுகளில்  மதிப்பெண்கள் குறைந்த போதெல்லாம், தான் செய்த தவறுகளை ஒரு தனி டைரியில் குறித்து வைத்து, அடுத்த முறை அந்தத் தவறு நடக்காமல் 100 சதவீதம் திருத்திக் கொள்வதை கிருத்திக் வழக்கமாகக் கொண்டிருந்ததே அவரது இந்த பிரம்மாண்ட வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது.

கடந்த ஜூலை 16 அன்று தேசியத் தேர்வு முகமை வெளியிட்ட Re-NEET தேர்வு முடிவுகளின்படி, சுமார் 20 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதியதில் 11.21 லட்சம் மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். இவ்வளவு பெரிய போட்டிக்கு மத்தியில், அகில இந்திய அளவில் 18-வது இடத்தைப் பிடிப்பது எளிதான காரியம் அல்ல. சரியான உத்தி, ஒழுக்கம் மற்றும் பொறுமை இருந்தால் முடியாததையும் சாதிக்கலாம் என்பதை கிருத்திக் ஜெயின் நிரூபித்துள்ளார். “தரவரிசையைத் தேடாமல் படிக்கும் செயல்முறையை நேசியுங்கள், மதிப்பெண் குறைந்தால் சோர்ந்து போகாமல் தவறுகளைத் திருத்துங்கள்” என்பதே நீட் தேர் எழுதவிருக்கும் பிற மாணவர்களுக்கு கிருத்திக் வழங்கும் தாரக மந்திரங்களாகும்.