இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமடைய வேண்டும், தங்களது வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற வேண்டும் என்ற மோகத்தில் பல இளைஞர்கள் தங்களது உயிரையே பணையம் வைத்து ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பார்ப்பவர்களையே நெஞ்சடைக்க வைக்கும் வகையிலான ஒரு விபரீத சாகச வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் வீட்டில் எரியும் கேஸ் ஸ்டவ் (எரிவாயு அடுப்பு) ஒன்றின் மீது மிக ஆபத்தான முறையில் புஷ்-அப்  உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளன. சில நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய ஒரு ரீல்ஸ்  வீடியோவை எடுத்து இணையத்தில் பதிவிடுவதற்காக, அந்த இளைஞர் இந்த கொடூரமான மற்றும் ஆபத்தான ஸ்டண்ட்டை செய்துள்ளார்.

 

.அடுப்பில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் போதே, சற்றும் பயமின்றி அதன் இருபுறமும் கைகளை ஊன்றி அவர் புஷ்-அப் எடுக்கிறார். ஒருவேளை கை சற்றே பிசகியிருந்தாலோ அல்லது உடைகள் தீயில் பட்டிருந்தாலோ மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு, அவரது உயிருக்கே ஆபத்தாய் முடிந்திருக்கும். இந்த வீடியோ கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வெளியானதும், இதைப் பார்த்த பொதுமக்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், இது போன்ற ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று சமூக வலைத்தளப் பயனர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர்.

மேலும், வெறும் லைக்குகளுக்காகவும், தற்காலிக புகழுக்காகவும் தங்களது அரிய உயிரைப் பணையம் வைக்கும் இத்தகைய ஆபத்தான சாகசங்களை இளைஞர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், இவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.