வானளவிற்கு உயர்ந்து வரும் விலைவாசிக்கு மத்தியில், இன்றைய இளைஞர்கள் பகுதி நேரமாகப் பணம் சம்பாதிக்கப் பல புதிய வழிகளைத் தேடி வருகின்றனர். அந்த வகையில், ஒரே ஒரு வேலையை மட்டும் நம்பியிருக்காமல், ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களில் ரகசியமாக வேலை செய்யும் ‘மூன்லைட்டிங்’ என்ற கலாச்சாரம் ஐடி துறையில் பெரும் புயலைக் கிளப்பி வருகிறது.
சமீபத்தில், ‘பிக்ஸ் யுவர் பைனான்ஸ்’ என்ற நிதி ஆலோசனை நிகழ்ச்சியில் பேசிய ரோஹித் (29) என்ற இந்திய ஐடி நிபுணர், தான் இந்த மூன்லைட்டிங் முறையில் மாதம் ₹7 லட்சம் (ஆண்டுக்கு ₹84 லட்சம்) சம்பாதிப்பதாகக் கூறி அதிர வைத்துள்ளார். ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ வசதியைப் பயன்படுத்தி, பகலில் ஒரு இந்திய நிறுவனத்திலும், இரவில் ஒரு அமெரிக்க நிறுவனத்திலும் எனத் தினமும் 16 மணி நேரம் இவர் வேலை பார்த்து வருகிறார்.
View this post on Instagram
குடும்பத்தின் ஏழ்மை காரணமாகத் தனது அண்ணன் படிப்பை தியாகம் செய்து தன்னை படிக்க வைத்ததாகவும், இப்போது தான் குடும்பத்தைக் காப்பாற்றத் தவறினால் அது ஒட்டுமொத்த குடும்பத்தின் தோல்வியாகிவிடும் என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தன்னிடம் ₹80 லட்சம் சேமிப்பு இருந்தும், வாங்கிய வீட்டின் இஎம்ஐ மற்றும் குடும்பச் செலவுகளால் தனது பொருளாதாரப் பாதுகாப்பு குறித்து இன்னும் பயமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஒரு நபர் தனது முதன்மை வேலைக்குத் தடையின்றி, அதன் வேலை நேரத்திற்குப் பிறகு கூடுதல் வருமானத்திற்காக மற்றொரு வேலையைச் செய்வதே ‘மூன்லைட்டிங்’ எனப்படும். லேப்டாப் மற்றும் இணையம் இருந்தால் போதும் என்பதால் கன்டென்ட் ரைட்டிங், கிராஃபிக் டிசைனிங், கோடிங், சாஃப்ட்வேர் டெவலப்மென்ட், டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இந்த மூன்லைட்டிங் தற்போது மிக வேகமாகப் பரவி வருகிறது.
மூன்லைட்டிங் என்பது முற்றிலும் சட்டப்பூர்வமானதும் அல்ல, அதே சமயம் முற்றிலும் சட்டவிரோதமானதும் அல்ல. இது முழுக்க முழுக்க நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் ஒப்பந்த விதிகளையே பொறுத்தது. சில நிறுவனங்கள் இதைத் திறமைக்கான கூடுதல் வருமானமாகப் பார்க்கின்றன.
ஆனால், பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் இதனைத் தங்களது நிறுவன ரகசியங்களுக்கு ஆபத்து மற்றும் ஏமாற்று வேலை என்று கூறி, கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பணிநீக்கம் வரை செய்கின்றன. அண்மையில் சோஹம் பாரேக் என்ற இந்திய இன்ஜினியர், தனது சுயவிவரக் குறிப்பில் போலித் தகவல்களை அளித்து பல நிறுவனங்களில் ஒரே நேரத்தில் மூன்லைட்டிங் செய்ததாகக் கூறிப் பணிநீக்கம் செய்யப்பட்டது உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
