பொய் சொன்னாலும் அது ஒரு நாள் மாட்டிக்கொள்ளும் என்பார்கள். அதுவும் பொதுவெளியில், நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் பொய் சொல்லி மாட்டிக்கொண்டால் எப்படி இருக்கும்? அப்படியொரு தர்மசங்கடமான சம்பவம்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. ஒரு நேரடி ஸ்டாண்ட்-அப் காமெடி ஷோவில், தன்னை ஒரு இந்தியன் என்று பொய் சொல்லி நாடகமாடிய பாகிஸ்தான் நபரின் முகத்திரை, பெண் காமெடியனின் சாதுரியமான கேள்வியால் ஒட்டுமொத்த அரங்கத்தின் முன்னிலையிலும் கிழிந்துள்ளது.
சீன வம்சாவளியைச் சேர்ந்த புகழ்பெற்ற ஸ்டாண்ட்-அப் காமெடியனான கேட் ஹூ நடத்திய நகைச்சுவை நிகழ்ச்சியில் தான் இந்த விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. மேடையில் கேட் ஹூ ரசிகர்களுடன் கலகலப்பாக உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு சீனப் பெண்ணிடம், அவருடைய காதலனைப் பற்றி விசாரித்தார். அந்தப் பெண் தன் காதலன் ஒரு இந்தியர் என்று கூற, கேட் ஹூவும் சிரித்துக்கொண்டே, “என் காதலனும் ஒரு இந்தியர்தான்” என்று சகஜமாகப் பேசினார். இதைக் கேட்டு அரங்கமே சிரிப்பொலியில் மூழ்கியது.
View this post on Instagram
ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அங்கு ஒரு அநாகரிகமான சூழல் உருவானது. அந்த சீனப் பெண்ணின் காதலன் (தன்னை இந்தியன் என்று கூறிக்கொண்டவர்) திடீரென தன் இருக்கையை விட்டு எழுந்து, மேடையை நோக்கி ஓடிவந்து கேட் ஹூவை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த கேட் ஹூ, சற்றும் யோசிக்காமல் தன் தனிப்பட்ட எல்லையை மதித்து, அந்த நபரை பின்னுக்குத் தள்ளி தடுத்தார். மேலும், மைக் மூலமாகவே, “என் அனுமதி இல்லாமல் என்னை எப்படித் தொடலாம்?” என்று கண்டிப்பான தொனியில் அவரை எச்சரித்தார்.
இருப்பினும், அந்த நபர் தன்னை ஒரு இந்தியன் என்று காட்டிக்கொள்ள தொடர்ந்து முயன்றார். அப்போது கேட் ஹூ புன்னகையுடன், மிகச் சாதாரணமான ஒரு கேள்வியை கேட்டார். “நீங்கள் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?” என்று கேட்டார். அவ்வளவுதான், அந்த நபர் அப்படியே உறைந்துபோனார். இந்தியாவின் ஒரு மாநிலத்தின் பெயர் கூட அவருக்குத் தெரியவில்லை. சில நொடிகள் மௌனத்திற்குப் பிறகு, வேறு வழியின்றி கேமரா முன்பாகவே, “இல்லை… உண்மையில் நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவன்” என்று உண்மையை ஒப்புக்கொண்டார். இதைக் கேட்டதும் ஒட்டுமொத்த அரங்கமும் கைதட்டி சிரிக்கத் தொடங்கியது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, “வெளிநாடுகளில் இருக்கும் 100-ல் 90 பாகிஸ்தானியர்கள் தங்களை இந்தியர்கள் என்றுதான் அடையாளப்படுத்துகிறார்கள்” என்றும், “உலக அரங்கில் இந்தியாவின் பிம்பத்தைக் கெடுக்கவே இவர் இவ்வாறு அநாகரிகமாக நடந்துகொண்டார்” என்றும் நெட்டிசன்கள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.
