பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள வால்மீகிநகர் பகுதியில் ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கிய ஒரு பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்பகுதியில் உள்ள விஷாஹா கிராமத்தைச் சேர்ந்த முன்னிலால் என்பவரது வீட்டிற்குள், அண்மையில் பெய்த கனமழை காரணமாக 10 அடி நீளமுள்ள பிரம்மாண்ட நச்சுப் பாம்பு ஒன்று புகுந்துள்ளது.

வீட்டிற்குள் புகுந்த அந்த இராட்சத பாம்பைக் கண்டு அலறியடித்துக் கொண்டு குடும்பத்தினர் வெளியே ஓடிவர, ஒட்டுமொத்த கிராமமும் பயத்தில் உறைந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், உள்ளூரில் பாம்புகளின் நண்பன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் பிரபல பெண் பாம்பு பிடி வீரரான ஜானகி தேவிக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

“>

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மின்னல் வேகத்தில் வந்த ஜானகி தேவி, வழக்கம் போலத் தனது அசாத்திய துணிச்சலால் அந்த பிரம்மாண்ட கோப்ராவை லாவகமாகப் பிடித்தார். அதன் தலையை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, உடலைத் தன் கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு, அருகில் உள்ள வனப்பகுதிக்குக் கொண்டு செல்ல முயன்றார்.

கிராம மக்களுக்கு எந்த ஆபத்தும் நேராமல் பாம்பை மீட்ட அந்தப் பெருமித தருணத்தில் தான் விதி விளையாடியது. எதிர்பாராதவிதமாக அந்த நச்சுப் பாம்பு திடீரென ஆக்ரோஷமடைந்து ஜானகி தேவியைக் கொடூரமாகக் கடித்தது. பாம்பு கடித்த சில நிமிடங்களிலேயே விஷம் தலைக்கேறி அவரது உடல்நிலை மிக மோசமாக சரிந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், உடனடியாக அவரை மீட்டு எல்லையைக் கடந்து நேபாளத்தில் உள்ள திரிவேணி பாம்புக்கடி சிகிச்சை மையத்தில் அனுமதித்தனர். அங்கு தற்போது உயிருக்குப் போராடும் நிலையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் தன் உயிரைப் பொருட்படுத்தாமல் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட நச்சுப் பாம்புகளைப் பிடித்து காடுகளில் பத்திரமாக விட்டு, பல நூறு மனித உயிர்களைக் காப்பாற்றிய பெருமை ஜானகி தேவியையே சாரும்.

இதற்கிடையே, நேபாளம் மற்றும் பீகாரில் பெய்து வரும் கனமழை மற்றும் காடுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாகவே வனவிலங்குகளும், பாம்புகளும் தஞ்சம் தேடி மனிதர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதாக வனத்துறை எச்சரித்துள்ளது.

பொதுமக்கள் யாரும் பாம்புகளைத் தாங்களாகவே அடிக்கவோ அல்லது பிடிக்கவோ முயல வேண்டாம் என்றும், உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது ஒட்டுமொத்த வால்மீகிநகர் மக்களும் தங்களின் ஆபத்பாந்தவனான ஜானகி தேவி விரைவில் குணமடையக் கண்ணீரோடு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.