பெண்ணின் மார்பை பிடித்து அழுத்துவதோ அல்லது அவளது கீழ் ஆடையை கழற்ற முயல்வதோ ‘பாலியல் வன்கொடுமை முயற்சி’  ஆகாது என்று பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு பெண் ஒருவர் தனது தந்தையுடன் புகைப்பட ஸ்டூடியோ ஒன்றிற்குச் சென்றுள்ளார். அங்கு கணினியில் புகைப்படத்தைப் பார்க்கச் சென்றபோது, அந்தப் பெண்ணின் தந்தையை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பிவிட்டு, கடையின் கதவை மூடிய உரிமையாளர் ஹிமான்ஷு குமார் என்பவர், அப்பெண்ணின் ஆடைகளைக் கலைந்து அவரது மார்பகங்களைப் பிடித்து அழுத்தியுள்ளார்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு தந்தை மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவரவே, குற்றவாளி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், கடந்த 2013-ல் ஹிமான்ஷுவுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து குற்றவாளி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில்தான் பாட்னா உயர் நீதிமன்றம் தற்போது இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணேந்து சிங், இந்தச் சம்பவத்தில் பெண்ணின் உடலுக்குள் பாலியல் ரீதியான ஊடுருவல்  நடந்ததற்கோ அல்லது அதற்கான தெளிவான மருத்துவ ஆதாரங்களோ இல்லை என்பதால், இதனை பாலியல் வன்கொடுமை முயற்சியாகக் கருத முடியாது என்று கூறி, கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்துள்ளார். ஒரு குற்றத்தை ‘கற்பழிப்பு முயற்சி’ எனக் கருதுவதற்கு, அது வெறும் தயாரிப்பு நிலையைத் தாண்டி, குற்றத்தைப் பூர்த்தி செய்யும் இறுதி நிலைக்குச் சென்றதற்கான உறுதியான சான்றுகள் இருக்க வேண்டும் என்று அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவரின் செயல்கள் கண்டிக்கத்தக்கவை மற்றும் பெண்ணின் கண்ணியத்தைக் குலைப்பவை என்றாலும், அவை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354-இன் கீழ் ‘பெண்ணின் மானபங்கம்’ என்ற வரம்பிற்குள் மட்டுமே வரும் என்று நீதிமன்றம் விளக்கியுள்ளது. இறுதியில், குற்றவாளி ஏற்கனவே அனுபவித்த சிறைக்காலத்தைக் கணக்கில் கொண்டு, அவரை முதன்மைக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.