ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது மறைவுக்குப் பிறகு, மார்ச் 8-ம் தேதி அவரது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றார். தற்போதைய தாக்குதலில் அவரும் காயமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் இதுவரை பொதுவெளியில் தோன்றாமல் அறிக்கைகள் மூலமாக மட்டுமே பேசி வருகிறார்.

சமீபத்தில் தனது தந்தையின் இறுதிச் சடங்கு நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, முதல்முறையாக அறிக்கை வெளியிட்டுள்ள மொஜ்தபா கமேனி, “எங்கள் நாட்டின் விருப்பப்படி, எனது தந்தையின் படுகொலைக்கு நிச்சயம் பழிவாங்கப்படும்; இதற்குக் காரணமான குற்றவாளிகள் யாரும் படுக்கையில் நிம்மதியாக இறக்க முடியாது” என்று மிகக் காட்டமாக எச்சரித்துள்ளார். வரும் ஜூலை 28 அன்று நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் அவர் முதன்முறையாக நேரில் பங்கேற்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பதற்றமான சூழ்நிலைக்கு நடுவே, ஈரான் தலைநகர் நிர்வாகத்தால் நடத்தப்படும் ‘ஹம்ஷஹ்ரி’ என்ற நாளிதழ் இணையத்தில் ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் ‘ஹிட் லிஸ்ட்’ பட்டியலை வெளியிட்டு உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரஞ்சு நிற சிறை ஆடை அணிந்திருப்பது போன்ற அந்தப் படத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோரின் நெற்றியில் துப்பாக்கியால் சுடுவதைக் குறிக்கும் ஸ்னைப்பர் குறி வரையப்பட்டுள்ளது.

இவர்களுடன் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ உள்ளிட்ட மேலும் 11 உலகத் தலைவர்களின் படங்களும் அதில் இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், டிரம்பைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்திருப்பதும், “தனக்கு ஏதேனும் நேர்ந்தால் ஈரானை மொத்தமாக அழிக்க 1000 ஏவுகணைகள் தயாராக உள்ளன” என டிரம்ப் அண்மையில் எச்சரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.