தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதிலும், தடையில்லா சான்றிதழ் கொடுப்பதிலும் பெருமளவில் லஞ்சம் வாங்கப்பட்டதாகத் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அண்மையில் ஒரு வெடிகுண்டைப் தூக்கிப் போட்டது. இந்த லஞ்சப் புகாரில் தனது பெயரும் தேவையின்றி தொடர்புபடுத்திப் பேசப்பட்டதால் கடும் அதிருப்தியடைந்த முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தற்போது சட்டப்பூர்வமாக அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் அலுவலகப் பொறுப்பாளரான நந்தகுமாருக்கு எதிராக, பிரபல வழக்கறிஞர் வில்சன் மூலமாக அன்பில் மகேஷ் அதிரடி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். தன் மீதான இந்த அவதூறுப் புகார்களுக்கு எதிராக அவர் எடுத்துள்ள இந்த சட்ட நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கறிஞர் வாயிலாக அனுப்பப்பட்டுள்ள அந்த நோட்டீஸில், நந்தகுமார் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தனது அவதூறுப் பேச்சுக்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று மிகக் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, முன்னாள் அமைச்சரின் புகழுக்குக் களங்கம் விளைவித்ததற்காக ₹50 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இந்த உத்தரவுகளுக்குப் பணிய மறுத்தால் நீதிமன்றம் மூலமாக மிகக் கடுமையான சட்டரீதியான நடவடிக்கைகள் பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இதே லஞ்சப் புகார் தொடர்பாகப் பதிவு செய்யப்படாத சங்கம் ஒன்றின் தலைவரான அரசகுமார் என்பவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை வளையத்தில் இருக்கும் நிலையில், தற்போது நந்தகுமாருக்கு எதிராக அன்பில் மகேஷ் அனுப்பியுள்ள இந்த ₹50 கோடி நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
