புனேவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிங்ககாட் கோட்டையில், இஸ்லாமியர்கள் நுழையத் தடை விதிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய பதாகை சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டையின் நுழைவு வாயிலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பதாகையில், “இந்தக் கோட்டை இந்துக்களுக்குச் சொந்தமானது; இஸ்லாமியர்கள் உள்ளே நுழைய அனுமதி இல்லை” என்று எழுதப்பட்டிருந்தது.

பாதுகாக்கப்பட்ட வரலாற்றுத் தளத்தில் இத்தகைய வெறுக்கத்தக்க வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு எப்படி வைக்கப்பட்டது என்பது குறித்துப் பலரும் தங்களது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு அந்தப் பதாகையை அகற்றினர். இது குறித்து ஹவேலி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை எந்தப் புகாரும் பதிவாகவில்லை என்றாலும், தொழில்நுட்ப ஆதாரங்களைச் சரிபார்த்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.