பெங்களூரு அருகே காதலித்துத் திருமணம் செய்து கொண்ட கணவர் உடனடியாகத் தன்னை நேரில் வந்து சந்திக்க மறுத்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில், 31 வயதே ஆன புதுமணப் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனுஜா என்ற பெண்ணும், ரவீந்திரா என்ற வாலிபரும் வேலைக்குச் செல்லும் வழியில் காதலித்துத் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்ட நிலையில், தன் குடும்பத்தினருக்கு விஷயத்தைச் சொல்ல ரவீந்திரா அவகாசம் கேட்டதால் தனுஜா தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று தனுஜா தனது கணவரை வீட்டிற்கு அழைத்த போது, அவர் தனது பெற்றோர் வீட்டில் இருப்பதால் உடனடியாக வர முடியாது என்றும், மறுநாள் காலை வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தனுஜா தனது மொபைலை அணைத்துவிட்டு, சிறிது நேரத்தில் “நான் விஷம் குடித்துவிட்டேன், என ரவீந்திராவுக்குக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். பதறிப்போய் சம்பவ இடத்திற்கு விரைந்த கணவர், தனுஜாவை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபரீதம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில், இளம்பெண்ணின் இந்தத் துயர முடிவு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.