தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க) கடலூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி இணை ஒருங்கிணைப்பாளரான சிவகுரு என்பவர், பெண் ஒருவரை ஆபாசமாக வீடியோ எடுத்து, அதைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், காவல்துறையிலும் மற்றும் த.வெ.க மாவட்ட தலைமைக்கும் ஆதாரங்களுடன் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். பெண்ணை மிரட்டி பணம் பறிக்க முயன்ற இந்த சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், த.வெ.க கட்சித் தலைமைக்கு இந்த விவகாரம் உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது.
விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய கடலூர் மாவட்ட த.வெ.க மாவட்ட செயலாளர் ராஜ்குமார், குற்றம் சாட்டப்பட்ட சிவகுருவைக் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். த.வெ.க கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையை மீறும் வகையில் செயல்பட்டதாலும், கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாலும் சிவகுரு கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார். த.வெ.க கட்சியின் இந்த மின்னல் வேக அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
