சென்னை அரும்பாக்கம் டிஜி வைஷ்ணவா கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்லேகர், “தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று பேசிய விவகாரம் பெரும் அரசியல் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஆளுநரின் இந்த பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தமிழகத்தின் கல்வி உரிமைகளில் ஆளுநர் மூக்கை நுழைப்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மிகவும் காரசாரமாக விமர்சித்துள்ளார்.
மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைகளுக்கு மதிப்பளித்து, அதற்கேற்பத்தான் ஆளுநர் பேச வேண்டுமே தவிர, தனிப்பட்ட முறையில் திணிக்க முயலக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாடும், தமிழக மக்களும் தேசிய கல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற எதார்த்த உண்மையை ஆளுநர் ஆர்லேகர் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் எம்பி காட்டமாக எச்சரித்துள்ளார்.
