அமெரிக்கா – ஈரான் மோதலின் உச்சகட்டமாக, ஹார்மூஸ் ஜலசந்தி கடல் பகுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘மொம்பாசா’ சரக்கு கப்பல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 6 இந்தியர்கள் படுகாயமடைந்தனர். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், புதுடெல்லியில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், டெல்லியிலுள்ள ஈரான் நாட்டின் தூதரை உடனடியாக நேரில் அழைத்து இந்த உயிரிழப்பு குறித்து மிகக் கடுமையான கண்டனத்தையும், விளக்கத்தையும் கேட்டுள்ளது.
வெளியுறவுத்துறை அதிகாரிகளின் சம்மனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அமைச்சக அலுவலகத்திற்கு நேரில் வந்த ஈரான் தூதர், இந்த விபரீத தாக்குதல் மற்றும் இந்திய மாலுமி பலியானது தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கங்களை அளித்துள்ளார். கடல் பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பையும், இந்திய மாலுமிகளின் உயிரையும் உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய அதிகாரிகள் அவரிடம் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளதால், இந்த விவகாரம் தற்போது சர்வதேச தூதரக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
