சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஷினு அலெக்ஸாண்டர் – ஜிஷா தம்பதியினரின் 5 வயது இளைய மகள் நெஸ்லின் ரியா, கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி காய்ச்சல் காரணமாக ஒரு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி மறுநாளே (டிசம்பர் 4) அந்த சிறுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தகுதி வாய்ந்த குழந்தைகள் நல மருத்துவர்களுடன் ஆலோசிக்காமல், மருத்துவர்கள் சரோஜினி மற்றும் ராஜா திக்விஜய் தேஜா ஆகியோர் தன்னிச்சையாக தவறான சிகிச்சை அளித்ததே குழந்தையின் மரணத்திற்குக் காரணம் என சந்தேகித்த சிறுமியின் தாய், இதுகுறித்து  காவல் நிலையத்திலும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிலும் முறைப்படி புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தரப்பில் இருதரப்பிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் மற்றும் மருத்துவ கவுன்சிலின் அதிரடி உத்தரவின்படி,  மப்பேடு பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட சிறுமி நெஸ்லின் ரியாவின் உடல், 8 மாதங்களுக்குப் பிறகு தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.