தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டு களவாணிகள் என்று கரூர் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். தமிழக முதல்-அமைச்சராக இருக்கும் விஜய், அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களை  தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டு, எங்களைப் பார்த்து கூட்டு களவாணிகள் என்று பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல; உண்மையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை திருடும் முதல்-அமைச்சர் விஜய் தான் உண்மையான களவாணி. மேலும், தமிழகத்தில் தற்போதைய த.வெ.க. ஆட்சியின் 60 நாட்களில் மக்கள் நலனுக்காக எந்தவொரு திட்டமும் செய்யப்படவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

நான்கு கால்கள் இருந்தால்தான் ஒரு நாற்காலி நிலையாக நிற்க முடியும் என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, முதல்-அமைச்சர் விஜய்யின் நாற்காலியில் இருக்கும் ஒரு கால் ‘இறவல் கால்’ (கடனாகப் பெற்றது) என்று சாடினார். அதாவது, மாற்று கூட்டணிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் ஆதரவோடுதான் தற்போது த.வெ.க. ஆட்சி உறுதுணையாக நின்றுகொண்டிருக்கிறது.

தொடர்ந்து பேசிய அவர், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே ரகசிய கூட்டணி இருப்பதாகக் கூறப்படுவது முற்றிலும் ஒரு கட்டுக்கதை என்றும், தி.மு.க. என்பது எப்போதும் ஒரு தீயசக்தி என்பதில் தங்களது நிலைப்பாடு மிக உறுதியாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். முதல்-அமைச்சர் விஜய் இதுவரை தமிழகத்திற்கு ஆக்கப்பூர்வமாக எதையுமே செய்யவில்லை என்றும் இந்த செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி சாடினார்.