தெருநாய்களின் தொல்லை மற்றும் அவற்றின் திடீர் தாக்குதல்களால் குழந்தைகள் கடுமையான காயங்களுக்குள்ளாகும் சம்பவங்கள் சமீபகாலமாக ஆங்காங்கே அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், சிறுமி ஒருவர் தனியாகச் சாலையில் நடந்து சென்றுகொண்டிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக, வெறிபிடித்த ஒரு தெருநாய் அந்தச் சிறுமியை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்து வருகிறது. நாய் தன்னைத் துரத்துவதைக் கண்டு நிலைகுலைந்த அந்தச் சிறுமி, உயிருக்கு பயந்து அலறியடித்துக்கொண்டு ஓடுகிறார். எந்த நேரத்திலும் அந்த நாய் சிறுமியைக் கடித்துக் குதறிவிடும் என்ற இக்கட்டான சூழல் உருவாகி, இருவரும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் எல்லையைத் தாண்டி ஓடுகின்றனர்.
ஆனால், அடுத்த சில நொடிகளில் அங்கு நடந்த சம்பவம் பார்ப்பவர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது. சிறுமியைத் துரத்திய அதே நாய், அடுத்த கணமே தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தலைதெறிக்கத் பின்னோக்கி ஓடி வருகிறது. காரணம், அந்தச் சிறுமியைக் காப்பாற்றுவதற்காக, அங்கிருந்த ஒரு சிறுவன் சிறிதும் பயமின்றி அந்த வெறிநாயை நோக்கி தைரியமாகத் துரத்திச் சென்றுள்ளான். அச்சிறுவனின் இந்த அசாத்திய துணிச்சலைக் கண்டு மிரண்டுபோன அந்த நாய், பயந்துபோய் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இந்தச் சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்ற அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகாத நிலையில், ‘எக்ஸ்’ வலைதளத்தில் பகிரப்பட்ட இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஆபத்தான நேரத்தில் சாதுரியமாகச் செயல்பட்டு சிறுமியின் உயிரைக் காத்த அந்தச் சிறுவனை ‘நிஜ உலக ஹீரோ’ என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
