அதிமுக-விலிருந்து விலகி அண்மையில் த.வெ.க-வில் இணைந்த முன்னாள் அமைச்சரும், தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தவருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது கட்சி மாற்றம் குறித்து தற்போது முக்கிய விளக்கமளித்துள்ளார். முன்னதாக, த.வெ.க தரப்பில் இருந்து தன்னைத் தொடர்புகொண்டு பேசியதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதனை மறுத்துள்ள அவர், தன்னை த.வெ.க-வில் இணையுமாறு யாரும் அழைக்கவில்லை என்றும், முற்றிலும் தனது சுய விருப்பத்தின் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இந்த திடீர் கட்சி மாற்றத்தையும், முன்னதாக வெளியான தகவல்களையும் சுட்டிக்காட்டி தி.மு.க தரப்பில் குதிரைபேரப் புகார் எழுப்பப்பட்டுள்ளது. இந்த அரசியல் பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய அவர், மற்ற முன்னாள் அமைச்சர்கள் த.வெ.க-வில் இணைந்ததால் தானும் இணைந்ததாகக் கூறப்படும் வதந்திகளில் உண்மையில்லை என்றும், முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையின் கீழ் மக்கள் பணியாற்றவே இந்த அதிரடி முடிவை எடுத்ததாகவும் பேட்டியளித்துள்ளார்.
