உத்தர கன்னட மாவட்டத்தின் முர்தேஷ்வர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற 22 வயது இளைஞர் ஒருவர், நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழ இருந்த நொடியில், அங்கிருந்த ரயில்வே ஊழியர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அவரைப் பத்திரமாக மீட்டார். அதாவது ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த அந்த இளைஞர், ரயில் நகர்ந்து கொண்டிருக்கும் போதே அவசரமாக கீழே இறங்க முயன்றுள்ளார். அப்போது கால் தவறி, ஓடிக்கொண்டிருந்த ரயிலின் சக்கரங்களுக்கு மிக அருகில் அவர் விழப்போன அந்தப் பயங்கரக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்தச் சமயத்தில் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ‘பாயிண்ட்ஸ்மேன்’ கணபதி நாயக், ஆபத்தை உணர்ந்து ஒரு நொடி கூட தாமதிக்காமல் சிறுத்தை போல் பாய்ந்து, தண்டவாளத்தை நோக்கிச் சரிந்த இளைஞரைத் தன் கைகளால் இழுத்துக் காப்பாற்றினார். இந்தச் சாதுரியமான செயலால் ஒரு பெரிய உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. கணபதி நாயக்கின் இந்த அசாத்திய தைரியத்தையும், சமயோசித புத்தியையும் பாராட்டி, கொங்கன் ரயில்வேயின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் அவருக்கு ₹10,000 ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவித்துள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், கணபதி நாயக்கை ஒரு நிஜ ஹீரோவாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.