டெல்லியில் குடும்பத் தகராறு காரணமாகப் பெற்றோர்களால் கைவிடப்பட்டு, பசியின் கொடுமையால் டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநிலச் சாலைகளில் பிச்சை எடுத்து வந்த மூன்று சகோதரிகள் உள்ளிட்ட நான்கு சிறுமிகளைப் போலீசார் அதிரடியாக மீட்டுள்ளனர்.  மைன்ஸ் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினரிடையே ஏற்பட்ட சண்டையில், தாய் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர் சென்ற 15 நாட்களுக்குப் பிறகு தந்தையும் 11 முதல் 16 வயதுடைய தனது மூன்று மகள்கள் மற்றும் 11 வயது மருமகனைத் தவிக்கவிட்டு ஓட்டம் பிடித்துள்ளார்.

ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட சிறுமிகளைத் தற்காலிகமாகப் பராமரித்த அத்தையாலும் வறுமை காரணமாக உணவளிக்க முடியாததால், பசியைத் தாங்க முடியாமல் கடந்த ஜூன் மாதம் நான்கு குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியேறி இரு குழுக்களாகப் பிரிந்துள்ளனர். இதில் இரு சிறுமிகள் இரயில் ஏறி மகாராஷ்டிரா சென்றும், மற்ற இரு குழந்தைகள் எய்ம்ஸ் உள்ளிட்ட  மருத்துவமனைச் சாலைகளிலும் யாசகம் பெற்று பிழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் 28-ஆம் தேதி தங்களது குழந்தைகள் காணாமல் போனதாகத் தாய் அளித்த புகாரின் பேரில்,  தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது குழந்தைகள் பிச்சை எடுக்கும் வீடியோ ஒன்று தாயின் மொபைலுக்கு வர, அதை வைத்து ஒரு  மருத்துவமனைக்கு வெளியே இலவச உணவிற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு சிறுமியையும், அவளது அத்தை மகனையும் போலீசார் மீட்டனர்.

மீதமுள்ள இரு சிறுமிகளைக் கண்டுபிடிக்க நாடு முழுவதும் தேடுதல் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், மகாராஷ்டிர மாநில ரயில்வே போலீசார் அங்கு ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த இரு சிறுமிகளையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து டெல்லி போலீசார் இரு சிறுமிகளையும் பத்திரமாக மீட்டு வந்து, நான்கு குழந்தைகளையும் தாயிடம் ஒப்படைத்ததோடு, வறுமையில் வாடும் அந்த குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் வழங்கி மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.