இந்திய இரயில் ஒன்றின் உள்ளே பூசாரி ஒருவர் அமர்ந்து தீவிரமாக ஆன்மீக பூஜைகளை நடத்த, வெள்ளை உடை அணிந்த பக்தர்கள் பலர் அதில் கலந்துகொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வைரலான ‘ஹனிமூன் கோச்’ வீடியோவைத் தொடர்ந்து இந்த வீடியோவும் பரவியதால், பொதுப் போக்குவரத்து வாகனமான இரயிலுக்குள் இதுபோன்ற மத வழிபாட்டுச் சடங்குகளைச் செய்ய அனுமதி உண்டா என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் வலுத்தன. விவாதம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து வடக்கு இரயில்வே தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் அவசர விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
After honeymoon coach, now worship rituals in saloon coach of Indian Railways. Indian Railway is becoming circus. pic.twitter.com/5UwZIJAdGb
— VIZHPUNEET (@vizhpuneet) July 12, 2026
அதில், இந்த ஆன்மீகப் பூஜை சாதாரண பயணிகள் பயணிக்கும் பொதுப் பெட்டியில் நடைபெறவில்லை என்றும், இது ஐஆர்சிடிசி மூலம் தனியார் ஒருவரால் முறைப்படி முன்பதிவு செய்யப்பட்ட சொகுசு ‘சலூன் கார்’ பெட்டி என்றும் இரயில்வே நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. விஐபிக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பயணிக்கும் இந்தத் தனிப்பட்ட சொகுசுப் பெட்டியில் சமையலறை, படுக்கையறை மற்றும் வரவேற்பறை உள்ளிட்ட பல வசதிகள் இருக்கும்.
இந்தச் சிறப்புப் பெட்டியைப் பயன்படுத்த ஜூலை 8-ஆம் தேதி ஐஆர்சிடிசி மூலம் ரூ.3,08,580 கட்டணம் செலுத்தப்பட்டு வணிகரீதியாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 10 அன்று புதுடெல்லியில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற ‘பஸ்சிம் எக்ஸ்பிரஸ்’ இரயிலில் இந்தத் தனிநபர் சொகுசுப் பெட்டி இணைக்கப்பட்டு பயணம் மேற்கொள்ளப்பட்டபோதுதான் இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளது என்று இரயில்வே நிர்வாகம் விளக்கமளித்ததை அடுத்து இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
