அயோத்தி ராமர் கோயில் காணிக்கைப் பணத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற சுந்தர காண்ட பாராயண நிகழ்ச்சியில் பேசிய அவர், ராமரின் பெயரால் பக்தர்கள் அளித்த கோடிக்கணக்கான ரூபாய் காணிக்கை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேட்டில் ஆளுங்கட்சியினருக்கே தொடர்பு இருப்பதால் அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

கோயில் கட்டுமானப் பணிகளில் பெருமளவில் கமிஷன் பெறப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி காட்சிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சுமத்திய அவர், இந்தத் திருட்டில் ஈடுபட்டவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடிக்கு அனுப்பும் வகையில் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்துள்ள கேஜ்ரிவால், பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொள்ளையர்களுக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.