விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 33 வயதுடைய இளம்பெண் ஒருவர், கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து தனது இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். வாழ்வாதாரத்திற்காகக் கட்டிட வேலைக்குச் சென்று வந்த அந்தப் பெண்ணுக்கு, மேலூர் அருகே வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆசை வார்த்தைகள் கூறி மர்ம நபர்கள் நம்ப வைத்துள்ளனர். இதனை உண்மை என்று நம்பிய அந்தப் பெண்ணைத் திட்டமிட்டு ஆள்நடமாட்டமற்ற கண்மாய் பகுதிக்கு வரவழைத்த ஒரு வாலிபர், அங்கிருந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த இளம்பெண்ணை மிரட்டி மிகக் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். மேலும், அவரிடமிருந்த அரை பவுன் தங்கச்சங்கிலி, வெள்ளி கொலுசு மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றைப் பறித்துக்கொண்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், மேலூர் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வினித் (21), செல்வகுமார் (33), அரவிந்த் (26), வீரபாண்டி (30) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 5 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்து பெண்ணின் செல்போன் எண்ணைக் கொடுத்த அனிதா என்ற பெண் மற்றும் பெண்ணை அழைத்துச் சென்ற வாலிபர் உள்ளிட்டோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். வேலை தருவதாகக் கூறி பெண்ணைச் சீரழித்து, நகைகளைப் பறித்த இந்தச் சம்பவம் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
