விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு தொடர்பான மண்டல செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக தோற்றுவிட்டதே என்ற கவலையை விட, அதிமுக-வை கண்முன்னரே சிதைத்து வருகிறார்களே என்பதுதான் பெரிய கவலையாக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், பெரியார் காலம் முதலே திராவிடக் கட்சிகளை ஒதுக்கிவிட வேண்டும் என்ற முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தனக்கு தனிப்பட்ட முறையில் பாஜக மீது எந்த வெறுப்பும் இல்லை என்றாலும், அதன் கருத்தியல் என்பது முற்றிலும் மாறுபட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன், பாஜக-வை தங்களது கொள்கை எதிரி என்று த.வெ.க.வும், தொடர்ந்து எதிர்த்து வருவதாக திமுக-வும் கூறி வரும் நிலையில், ஏன் இவர்கள் அனைவரும் ஒரே அணிக்குள் வரக்கூடாது என்ற முக்கியக் கேள்வியை எழுப்பினார். கேரளாவில் காங்கிரஸும் இடதுசாரிகளும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும் காங்கிரஸும் தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ‘இந்தியா’ கூட்டணி என்று வரும்போது ஒன்றாக நிற்பதை சுட்டிக்காட்டிய அவர், த.வெ.க.வுக்கும் திமுக-வுக்கும் ஒரே எதிரி பாஜக தான் என்பதால், ஏன் தமிழ்நாட்டிலும் அதுபோன்றதொரு அரசியல் கூட்டணி உருவாகக் கூடாது என்று தனது உரையில் வலியுறுத்தினார்.