குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில், தனது ஆசிரியருக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த 13 வயது மாணவர் ஒருவர், அந்த ஆசிரியரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆறாம் வகுப்பு படிக்கும் பிரேம் சுனாரா என்ற அந்த மாணவர், தனது ஆசிரியர் ஜெயேஷ் பர்மாரை ‘பிறந்தநாள் வாழ்த்து’ கூறி அழைத்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியர், அவனை வகுப்பறைக்கு வெளியே அழைத்துச் சென்று பலமுறை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அந்த மாணவனின் காதில் பலத்த காயம் ஏற்பட்டு, தீவிர வலியால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு பயந்துபோன அந்த மாணவன், முதலில் தனது பெற்றோரிடம் இதைப் பற்றிச் சொல்லவில்லை. இருப்பினும், காது வலி தாங்க முடியாமல் அழத் தொடங்கியதும், நடந்த விவரத்தை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து மாணவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அந்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரு-சிஷ்ய உறவைச் சிதைக்கும் வகையில் நடந்த இந்தத் தாக்குதல், பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆசிரியர்களின் நடத்தை குறித்துப் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
