சொமேட்டோ  டெலிவரி ஊழியர் ஒருவரின் தாயார் ஐசியூவில்  அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு உதவ முன்வந்த வாடிக்கையாளர் ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் இணையவாசிகளை நெகிழ வைத்துள்ளது.

உணவு டெலிவரி செய்ய வந்த ஊழியரின் கண்கள் கலங்கியிருப்பதைக் கண்ட அங்கித் பாண்டே என்ற வாடிக்கையாளர், விபரம் கேட்க, அவரது தாய் படிக்கட்டுகளில் இருந்து விழுந்து கவலைக்கிடமாக மருத்துவமனையில் இருப்பதை அறிந்தார்.

சொந்த ஊர் செல்ல 30 மணி நேர இரயில் பயணம் மட்டுமே ஒரே வழி என்பதால், தாயை உயிரோடு பார்ப்போமா என்ற ஏக்கத்தில் அந்த ஊழியர் தவித்துள்ளார்.

நிலைமையைப் புரிந்துகொண்ட அங்கித், உடனடியாக அந்த ஊழியருக்கு ரூ.4,000 மதிப்பிலான விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொடுத்து, அவர் சரியான நேரத்திற்குத் தாயைச் சென்றடைய உதவியுள்ளார்.

விமானத்தில் சென்றதால் உரிய நேரத்தில் தாயைச் சந்தித்து நலம் விசாரித்த டெலிவரி ஊழியர், பின்னர் அங்கித்திற்கு நன்றி தெரிவித்து, அவர் கொடுத்த 4,000 ரூபாயையும் திருப்பி அனுப்பியுள்ளார்.

ஆனால், அந்தப் பணத்தை மீண்டும் அவருக்கே அனுப்பிய அங்கித், தாயின் மருத்துவச் செலவுகளுக்குப் பயன்படுத்துமாறு பெருந்தன்மையுடன் கூறியுள்ளார்.

மனிதநேயம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதை உணர்த்தும் இந்தச் சம்பவம், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.