மும்பையின் வீதிகளில் கடந்த 40 ஆண்டுகளாகப் பிச்சை எடுத்து வரும் பரத் ஜெயின் என்ற நபர், தற்போது சுமார் 7.5 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியாக உயர்ந்து இந்தியாவின் கோடீஸ்வர பிச்சைக்காரராக வலம் வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் மற்றும் ஆசாத் மைதானப் பகுதிகளில் தினமும் 10 முதல் 12 மணி நேரம் பிச்சை எடுக்கும் இவர், மாதத்திற்குச் சுமார் 75,000 ரூபாய் வரை ஈட்டுகிறார்.

இந்தப் பணத்தைக் கொண்டு மும்பையில் 1.4 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளையும், தானே பகுதியில் மாதந்தோறும் 30,000 ரூபாய் வாடகை பெற்றுத்தரும் இரண்டு கடைகளையும் அவர் வாங்கியுள்ளார்.

இவரது குடும்பத்தினர் சொந்தமாகத் தொழில் செய்து செட்டிலாகிவிட்ட நிலையில், பிச்சை எடுப்பதை நிறுத்துமாறு அவர்கள் வற்புறுத்தியும், தனக்குப் பிச்சை எடுப்பது பிடித்துள்ளதாகக் கூறி பரத் ஜெயின் அதைத் தொடர்கிறார்.

பிச்சையெடுத்துக் கிடைக்கும் வருமானத்தை அறக்கட்டளைகளுக்கும் கோவில்களுக்கும் தானமாக வழங்கி வருவதாகக் கூறும் இந்த விஐபி பிச்சைக்காரரின் வாழ்க்கை முறை, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.