தெற்கு கொல்கத்தாவின் பிரதாபாதித்யா சாலையில் உள்ள ஒரு தொழிலதிபரின் அலுவலகத்திற்குள் நுழைந்த கொள்ளைக் கும்பல், தங்களை போலீஸ் துப்பறிவாளர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டது. அங்கு பெருமளவில் கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி சோதனை செய்ய வந்ததாக நம்பவைத்துள்ளனர்.

இதை தொடர்ந்து தங்களின் போலி அடையாள அட்டைகளைக் காட்டிய அந்தக் கும்பல், அங்கிருந்த தொழிலதிபர் மற்றும் ஊழியர்களின் மொபைல் போன்களைப் பறிமுதல் செய்தது. பின்னர், ஊழியர்களை மிரட்டி, அலுவலக லாக்கரை வலுக்கட்டாயமாகத் திறக்கச் செய்து, அதிலிருந்த ரூ. 2 கோடி பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இதனால் கொள்ளையர்கள் அங்கிருந்து சென்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு, உள்ளூர் காவல்துறையிடம் பேசிய போதே தாங்கள் ஏமாற்றப்பட்டதை அந்தத் தொழிலதிபரும் ஊழியர்களும் உணர்ந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல்துறையின் துப்பறியும் பிரிவினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதன் பலனாக, நகரின் புறநகர்ப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து ரூ. 5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய மற்ற குற்றவாளிகளையும், மீதமுள்ள பெரும் தொகையையும் மீட்க போலீஸார் தற்போது தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.