ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில், காணாமல் போன 11 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, நான்கு நாட்களாகப் பல்வேறு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடந்த ஜூன் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஒரு இளைஞரைச் சந்திக்கச் சென்ற அந்தச் சிறுமி, இரவு பேருந்து நிலையத்திற்குத் திரும்பியபோது ஒரு மின்சார ஆட்டோ ஓட்டுநரால் ஆசை வார்த்தைகள் கூறப்பட்டு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அதோடு அங்கு அடைத்து வைக்கப்பட்டு, நான்கு நாட்களில் மூன்று வெவ்வேறு ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்ட அந்தச் சிறுமி, பல ஆண்களிடம் பாலியல் தொழிலுக்காக விற்கப்பட்டுள்ளார். ‘வாடிக்கையாளர்களின்’ தோற்றத்தைப் பொறுத்து ஹோட்டல் நிர்வாகத்தினர் சிறுமியை தலா 1,000 ரூபாய் முதல் 1,800 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்து விற்று வந்துள்ளனர்.
இதனால் காணாமல் போன நான்கு நாட்களுக்குப் பிறகு, போலீசாரால் அந்தச் சிறுமி ஒரு ஹோட்டலில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டார். சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கில் போக்சோ (POCSO) சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி கடும் அதிர்ச்சியில் இருந்ததால் குற்றவாளிகளின் எண்ணிக்கையை மாற்றி மாற்றி கூறினாலும், இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் உட்பட இதுவரை 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு ஹோட்டல் கட்டிடங்களை அதிகாரிகள் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர். தற்போது இந்த வழக்கை விசாரிக்க ராஜஸ்தான் காவல்துறை சார்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
