தூத்துக்குடி அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக, தூங்கிக் கொண்டிருந்த தனது 14 வயது மகள் மற்றும் 12 வயது மகனின் கை, கால்களில் மின்சார ஒயரைச் சுற்றி, மின்சாரம் பாய்ச்சிக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, லாரி ஓட்டுநரும் அதே பாணியில் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சிறுபாடு சவேரியார்புரத்தைச் சேர்ந்த மரிய மைக்கேல் (45) என்ற லாரி ஓட்டுநருக்கு, சபிதாரோனிகம் என்ற மனைவியும், 9-ம் வகுப்பு படிக்கும் மரிய நிரோஷா (14) என்ற மகளும், 7-ம் வகுப்பு படிக்கும் மரிய கெனிஸ்டன் (12) என்ற மகனும் இருந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகச் சபிதாரோனிகம் தனது கணவரைப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால், தனது தந்தை அந்தோணிமுத்து மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்த மரிய மைக்கேல், மனைவி பிரிந்து சென்ற துயரத்தால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே தந்தை அந்தோணிமுத்து படுத்திருக்க, உள்ளே மரிய மைக்கேல் தனது குழந்தைகளுடன் தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவில் திடீரென எழுந்த அவர், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மகள் மரிய நிரோஷா மற்றும் மகன் மரிய கெனிஸ்டன் ஆகியோரின் கை, கால்களில் மின்சார ஒயர்களைச் சுற்றி, மின்சாரத்தைப் பாய்ச்சியுள்ளார். இதில் இரு பிஞ்சுகளும் துடிதுடித்துச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பிள்ளைகள் இறந்ததை அடுத்து, மரிய மைக்கேலும் தனது காலில் மின்சார ஒயரைச் சுற்றிக்கொண்டு மின்சாரத்தைப் பாய்ச்சி தற்கொலை செய்துகொண்டார். நேற்று காலை வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்து பூட்டிய கதவை உடைத்து உள்ளே சென்ற புதுக்கோட்டை போலீசார், மூன்று பேரின் சடலங்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.