இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனங்களில் நிலவி வரும் பணிச் சூழல் மற்றும் கூடுதல் நேர வேலைப் பளு குறித்துப் பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் நிலையில், நியூசிலாந்து நாட்டின் பணி கலாச்சாரத்தை மனதாரப் பாராட்டி இந்தியப் பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நியூசிலாந்தில் பணியாற்றி வரும் யாமிகா காந்தி என்ற அந்தப் பெண், வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு ஆட்கள் நடமாட்டமின்றி காலியாக இருந்த தனது அலுவலகத்தில் இருந்து இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தான் ஒரு முக்கியமான வேலையை முடித்துச் சமர்ப்பித்த பிறகு, அவரது சக ஊழியர் அவருக்குத் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துப் பாராட்டியதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் வழக்கமான கடமையாகக் கருதப்படும் சிறு வேலைகளுக்குக் கூட, நியூசிலாந்தில் ஊழியர்களின் உழைப்பை அங்கீகரித்து உண்மையான அன்போடு நன்றி கூறுவது தனக்குப் பெரும் “கலாச்சார அதிர்ச்சியை” ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஊழியர்களின் தரம் என்பது அவர்கள் பார்க்கும் வேலையின் தரத்தை விட, எவ்வளவு மணி நேரம் கூடுதலாக அலுவலகத்தில் செலவிடுகிறார்கள் என்பதை வைத்தே மதிப்பிடப்படுவதாகவும், எப்போது வேண்டுமானாலும் தங்களை மாற்றிவிடுவார்கள் என்ற பயத்திலேயே ஊழியர்கள் வார இறுதியிலும் உழைப்பதாகவும் யாமிகா ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். ஆனால், நியூசிலாந்திலோ வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கு மேல் யாரும் வேலை செய்யக் கூடாது என்றும், ஒருவேளை கூடுதல் நேரம் வேலை செய்ய நேர்ந்தால் அதற்குப் பதிலாக மற்றொரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ள மேலாளர்களே அறிவுறுத்துவதாகவும் கூறியுள்ளார். ஊழியர்கள் சரியாக வேலை செய்யாத பட்சத்தில், அவர்களைக் குறை கூறாமல் நிறுவனமே முன்வந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் அவர் நெகிழ்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களிலும் ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்கும் இதுபோன்ற ஆரோக்கியமான பணிச் சூழல் வர வேண்டும் என தங்களது கருத்துக்களைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
