பாகிஸ்தான் எப்போதும் இந்தியாவிற்கு எதிராக சதித் திட்டங்களை தீட்டி, பயங்கரவாதத்தை வளர்த்து வருவதை தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், தற்போது அந்த நாட்டின் முகத்திரையைக் கிழிக்கும் வகையிலான பகீர் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவி வருகிறது. ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைமைத் தளபதியான ஷம்ஷேர் கான் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், காஷ்மீரில் உள்ள குப்வாரா, லோலாப் முதல் கதுவா வரை உள்ள அனைத்து நகரங்களின் மயானங்களிலும் பாகிஸ்தானில் இருந்து வந்து கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்களே புதைக்கப்பட்டுள்ளன என்று அவர் பேசியிருப்பது, எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் நடத்தும் பயங்கரவாத ஊடுருவலுக்குப் பெரிய ஆதாரமாக மாறியுள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவம் கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாதிகளுக்கு எதிராகக் கையாண்டு வரும் ‘ஜீரோ டாலரன்ஸ்’ கொள்கையே பயங்கரவாத அமைப்பின் இந்த விரக்தியான பேச்சுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. இந்தியப் பாதுகாப்புப் படையினரின் அதிரடி வேட்டையால் பயங்கரவாத அமைப்புகளின் முக்கியத் தளபதிகள் பலர் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்டு வருவதால், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்குள் கடும் பீதி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே, உள்ளூர் இளைஞர்களை மீண்டும் பயங்கரவாதப் பாதைக்கு ஈர்ப்பதற்காக இப்படிப்பட்ட பிரச்சார வீடியோக்களை அவர்கள் பரப்பி வருகின்றனர். தற்போது காஷ்மீர் இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் சேருவது பெருமளவு குறைந்துள்ள நிலையில், அமைதியைக் குலைக்கப் பார்க்குக்கும் இந்த வீடியோக்கள் குறித்துப் பாதுகாப்பு முகமைகளும், சைபர் கிரைம் பிரிவினரும் தீவிரத் தொழில்நுட்பக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.