எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்கள் பழுதாகிவிடுவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. பீகாரைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மணீஷ் காஷ்யப், தனது புதிய டொயோட்டா காரின் இன்ஜின் பழுதானதற்கு அரசின் எத்தனால் கலப்புக் கொள்கைதான் காரணம் என்று கூறி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இது தரம் குறித்துப் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, டொயோட்டா நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆய்வில் யூடியூபரின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய் என நிரூபிக்கப்பட்டு, தற்போது அவர் மீது போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட காரை ஆய்வு செய்ய டொயோட்டா நிறுவனம் கேட்டபோது, ஆரம்பத்தில் காரைத் தர மறுத்த யூடியூபர், சட்ட நடவடிக்கை எச்சரிக்கைக்குப் பிறகே காரை ஒப்படைத்துள்ளார். டொயோட்டா நிறுவனத்தின் நிபுணத்துவப் பொறியாளர்கள் காரின் இன்ஜின் மற்றும் எரிபொருள் தொட்டியை ஆய்வு செய்தபோது, பெட்ரோலில் அதிக அளவில் தண்ணீர் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுக்கு பெட்ரோலில் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டதே காரணம் என்றும், அதற்கும் எத்தனால் கலந்த பெட்ரோலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதும் தொழில்நுட்ப அறிக்கையில் தெளிவாகியுள்ளது. இதனால், நிறுவனத்தின் பெயருக்குக் களங்கம் விளைவித்தல் மற்றும் வதந்தி பரப்புதல் ஆகிய காரணங்களுக்காக டொயோட்டா நிறுவனம் யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
மேலும், பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் இலக்கை எட்டியதைத் தொடர்ந்து, டீசலில் 15% வரை ‘ஐசோபியூட்டனால்’ கலப்பதற்கான திட்டத்தில் அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
