கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி பி.டெக் படித்து வந்த மாணவர் ஒருவர், அங்கு சேர்ந்த சில நாட்களிலேயே பல்வேறு கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டார்.
இதுகுறித்து விடுதியில் வழங்கப்பட்ட உணவு மிகவும் தரம் குறைந்ததாகவும், தங்குமிடம் முறையாக பராமரிக்கப்படாமலும் இருந்துள்ளது. மேலும், சேர்க்கையின் போது உறுதியளிக்கப்பட்ட வைஃபை வசதிக்கான பாஸ்வேர்டை, மாணவர் பலமுறை கேட்டுக்கொண்ட போதிலும் விடுதி நிர்வாகம் வழங்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், அங்கு சேர்ந்த வெறும் 7 நாட்களிலேயே அந்த ஹாஸ்டலை விட்டு வெளியேறினார். இதுகுறித்து காங்ரா மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் அந்த மாணவர், விடுதி நிர்வாகத்தின் சேவை குறைபாட்டிற்கு எதிராகவும், தான் செலுத்திய கட்டணத்தை திரும்பப் பெறக்கோரியும் வழக்கு தொடர்ந்தார்.
அதோடு வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், மாணவருக்கு தரமான சேவைகளை வழங்கத் தவறிய விடுதி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இறுதித் தீர்ப்பாக, மாணவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கான இழப்பீடு மற்றும் வழக்கு செலவுகள் உட்பட மொத்தம் 40,000 ரூபாயை வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
